வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் to டிஜிட்டல் நூலகம்! பட்ஜெட் அறிவிப்பில் 10 முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் 10 முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
2023 – 24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை, உள்கட்டமைப்பு, திறன் பயன்பாடு, பசுமை வளர்ச்சி, இளைஞர்நலன் உள்ளிட்ட 7 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு இப்பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த மத்திய பட்ஜெட்டில் முக்கியமான 10 அம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1. வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும். மேலும், விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
2. குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டு, அங்கு புவியியல், மொழிகள், அவற்றின் வகைகள் மற்றும் நிலைகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களில் தரமான புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
3. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருப்போருக்கு வருமான வரி கிடையாது. ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை இருந்த வரம்பு, தற்போது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது
4. நாடு முழுவதும் தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். மருத்துவத் துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டம் வகுக்கப்படும்.
5. பழங்குடியினர் மேம்பாட்டுக்காக 3 ஆண்டுகளில் ரூ. 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அதன்படி, இலக்கு நிர்ணயித்த 3 ஆண்டுகளில் பழங்குடியினருக்கு திறன் வழங்கும் பயிற்சி அளிக்கப்படும். பழங்குடியின குழந்தைகளுக்கான ஏகலைவா பள்ளித் திட்டம் மேம்படுத்தப்படும்.
6. மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
7. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கடன் வட்டியை 1% குறைக்க புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
8. கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100% இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்படுள்ளது. அதன்படி, நாட்டின் அனைத்து நகரங்களிலும் இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்றும் முறை செயல்படுத்தப்படும்.
9. 7.5% வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் 2 ஆண்டுகளில் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை சேமிக்கலாம். முதியோருக்கான சிறப்பு வாய்ந்த நிதி திட்டத்தில் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும்.
10. ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ. 4.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஜாயிண்ட் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ.15 லட்சம் வரை பரிவர்த்தனை செய்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.