அதானியின் மோசடி குறித்து விசாரணை; 9 எதிர்கட்சிகள் முழக்கம்.!

அதானி குழுமம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் (Hindenburg Research) நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. அதில், அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதானி பங்குகள் கையாளப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியது.

இந்த அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜனவரி 25ஆம் தேதி முதல் அதானி பங்குகள் மிக மோசமாக சரிந்து வருகின்றன. அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து பங்குகளுமே கடந்த சில நாட்களாக சரிந்து வருகின்றன.

இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜனவரி 24ஆம் தேதி வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்து வந்தார் கவுதம் அதானி. அதன்பின் அதானி பங்குகள் சரியத் தொடங்கின.

இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடம், 8ஆம் இடம் என கீழே இறங்கி வந்தார் கவுதம் அதானி. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்தே வெளியேறியுள்ளார் கவுதம் அதானி.

அதானி பங்குகள் சரிந்ததால் கடந்த சில தினங்களாக எல்ஐசி (LIC), எஸ்பிஐ (SBI) நிறுவனங்களும் விமர்சனங்களை சந்தித்துள்ளன. ஏனெனில், அதானி நிறுவனங்களில் எல்ஐசி நிறைய முதலீடு செய்துள்ளது. மேலும், அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ வங்கி நிறைய கடன் வழங்கியுள்ளது. மற்ற சில பொதுத்துறை வங்கிகளும் அதானிக்கு கடன் வழங்கியுள்ளன.

ஏற்கெனவே சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல கிரெடிட் சூயிஸ் (Credit Suisse) நிறுவனம் அதானி நிறுவனங்களின் பத்திரங்களை பிணையாக ஏற்க முடியாது என முடிவு செய்துள்ளது. இந்த வரிசையில் இப்போது சிட்டிகுரூப் குழுமமும் அதானி பத்திரங்களை ஏற்க முடியாது என முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிட்டிகுரூப் குழுமம் வெளியிட்டுள்ள மெமோவில், “அண்மை நாட்களாக அதானி வெளியிட்டுள்ள பத்திரங்கள் கடுமையாக விழ்ச்சி அடைந்துள்ளன. அதானி குழுமத்தின் நிதி நிலை குறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து அதன் பங்குகள், பத்திரங்களின் விலை சரிந்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.

எனவே, அதானி குழுமத்தால் வெளியிடப்படும் பத்திரங்களை பிணையாக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என சிட்டிகுரூப் முடிவு செய்துள்ளது. எனவே, இனி அதானி பத்திரங்களை பிணையாக வைத்து சிட்டிகுரூப் குழுமத்திடம் கடன் பெற முடியாது.

இந்தநிலையில் அதானியின் மோசடி குறித்து விவாதிக்க 9 எதிர்கட்சிகள் கோரியதால் நாடாளுமன்றம் ஒரு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதானி குழுமத்தின் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் மீதான விவாதம் மற்றும் விசாரணைக்கு எதிர்க்கட்சிகளின் அழைப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்ற குழு அல்லது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் முழக்கமிட்டன.

2023 பட்ஜெட்; பாதுகாப்புத்துறைக்கு 5.93 லட்சம் கோடி ஒதுக்கீடு.!

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தார், உறுப்பினர்களை “ஆதாரமற்ற கூற்றுக்களை கூற வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.