‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டத்தை இன்று வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘‘கள ஆய்வை வேலூரில் தொடங்கியதை நான் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இந்தக் கூட்டத்தை பொறுத்தவரை ஏதோ குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல; இதனுடைய நோக்கமும் அதுவல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கருதிதான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். சுணக்கம் காணப்படக்கூடிய சில பணிகள் இந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ‘அதை விரைவில் நிறைவேற்றுவோம்’ என்ற நம்பிக்கையையும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். தொய்வுகளை நீக்க வேண்டும். நம்முடைய பணிகளில் காணக்கூடிய இடர்களையெல்லாம் குறைக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும்.

கடந்த 20 மாத காலத்தில், நாம் ஆட்சிக்கு வந்து, எத்தனையோ திட்டங்களை தீட்டியிருக்கிறோம். அப்படி தீட்டிய திட்டங்களில், 80 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பணிகளை நிறைவேற்றியும் காட்டியிருக்கிறோம். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த்துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, விளிம்பு நிலை மக்களுடைய நலன், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைகளைச் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அதனுடைய பயன் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் இந்த ஆய்வில் நாம் மேற்கொண்டிருக்கிறோம்.
இந்த களப்பணி மற்றும் ஆய்வுக் கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு துறை தலைவர்களும், அரசு செயலர்களும் உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திட்ட செயலாகத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கான திருத்த ஆணை வெளியிடலாம். நிதி தேவை அல்லது பணியாளர் பற்றாக்குறை இருந்தால் அதைச் சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்.

ஒவ்வொரு திட்டமும் என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிதையாமலும், அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிக் காட்டும் வகையிலும் உங்களது செயல்பாடுகள் அமைய வேண்டும். திட்டங்களுக்கான நிதி வீணாகிவிடாமல் விரைவாகவும், சிக்கனமாகவும் செயல்படுத்த வேண்டும். அதேபோல, குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு திட்டம் முடக்கப்பட்டாலோ, சுணக்கமாக நடந்தாலோ அது அரசின்மீது விமர்சனமாக வைக்கப்படுகிறது. எனவே, இதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தந்த நிதி ஆண்டுக்கான பணிகள் அந்த ஆண்டுக்குள்ளேயே முடிக்கப்பட வேண்டும். ‘டெண்டர் விட்டோம்; திட்டத்தை முடித்துத் தர வேண்டியது ஒப்பந்ததாரின் வேலை’ என்று இருந்துவிடாமல், அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது உங்களுடைய கடமை. அடுத்த மாதத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆகிறது. புதிய புதிய திட்டங்கள் சேர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கக் கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள்’’ என்று அறிவுறுத்தி உத்தரவிட்டார்.