கிருஷ்ணகிரியில் கலவரம்: 3 மணி நேரம் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை – என்ன நடந்தது?

Krishnagiri Violence: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப். 2) எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில், அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டன.

இந்த போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, போலிசார் அனைவரையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அந்த இடத்தை விட்டு புறப்படுமாறும் ஆணையிட்டுள்ளனர். 

இதனால், திடீரென ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதை போலிசார் தடுத்ததால் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர் போலிசார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை போலிசார் தடுக்க முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. 

பின்னர், சென்னைபெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கற்களை குவித்த இளைஞர்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  பின்னர் இளைஞர்கள் தாங்களாகவே எருதுவிடும் விழாவை நடத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எருதுவிடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தும், கலைந்து செல்லாத இளைஞர்கள், மறியலில் ஈடுபட்டதால் 3 மணிநேரத்திற்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இளைஞர்களின் இந்த செயலால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்தனர். 

கலவரகாரர்களை வெளியேற்ற அதிவிரைவு படையுடன் வந்த போலீசார் மற்றும் வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவத்தால் அரசு, தனியார்  பேருந்துக்கள் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலில் சுமார் 15க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. போலீசார் தாக்குதலை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறபது.  அதி விரைவு படையினரின் நடவடிக்கையால் போக்குவரத்து பாதிப்பு நீக்கப்பட்டு மீண்டும் சேவை தொடங்கியது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.