கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வருவதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

கும்பகோணம்: தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளான திருபுவனம், திரு நாகேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்பொழுது சாரல் மழையும் பெய்து வருகிறது.

மழையால் கும்பகோணம் மற்றும் திருவிடை மருதூர் பகுதிகளில் நடைபெற்று வரும் சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதன் விளைவாக வேளாங்கண்ணி, காரபிடாகை, புலியூர், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. சம்பா பயிர்கள் அடியோடு சாய்த்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்திருக்கிறார்கள்.

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விடுமுறையை அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சாரல் மழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுர மாவட்டத்தில் பலத்த சுரைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனிடையே பரமக்குடி, ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றால் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் என் புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதே போன்று தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.