பாஜக போட்டியிட்டால் கவலை இல்லை – மல்லுக்கட்டுக்கு தயாரான எடப்பாடி டீம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று சென்னை தலைமை செயலகம் சென்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போலி வாக்காளர்களை நீக்கவேண்டும் என மனு அளித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக அத்துமீறல்கள் நடைபெற்று வருகின்றன. 238 வாக்குச்சாவடிகளில் அதிமுகவினர் உறுதி செய்யும்போது 30,000 முதல் 40,000 பேர் வரை ஆளே இல்லாமல் வாக்குகள் உள்ளது. அதனால் போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன்.

அதிமுக இரட்டை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அதிமுக இரட்டை இல்லை சின்னம் முடக்கம், முடக்கம்னு நீங்கள் தான் சொல்றீங்க. இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது” என்று கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அது ஒரு மண் குதிரை என்பது பொதுமக்களுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் தெரியும்” என்று கூறினார்.

பாஜக வேட்பாளரை நிறுத்தினால், அதிமுக வேட்பாளர் திரும்பப் பெறப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “நாங்கள் முன் வைத்த காலை, பின் வைக்க மாட்டோம்” என்று கூறினார்.

மெரினா கடற்கரையில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பேசிய அவர், “சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். கருணாநிதி நினைவிடத்திற்கு அதில் கால் விழுக்காட்டினர் தான் செல்கின்றனர். அதனை அதிகரிக்கவே நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. பேனா சின்னம் அமைத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். சுற்றுச்சூழல் பாதிக்கும். வக்கிர புத்தியுடன் பேனா சின்னம் அமைக்கப்படுகிறது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.