போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், சிபிசிஐடி விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் என எச்சரித்துள்ளது.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகளை பதிவு செய்து, 15 பேரை கைது செய்துள்ளனர். தற்போது புலன் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி காஞ்சிபுரம் சரக டிஎஸ்பி எம்.வேல்முருகன் அறிக்கை தாக்கல் செய்தார்.

அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையையே மீண்டும் தாக்கல் செய்துள்ளதாகவும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அப்போதைய வருவாய் அதிகாரி நர்மதா, இந்த வழக்கு விசாரணைக்கு மூன்று முறை ஆஜராகியுள்ள நிலையில், அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளதன் மூலம், சிபிசிஐடி அதிகாரிகள் எவ்வளவு மந்தமான முறையில் செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நத்தை வேகத்தில் செயல்பட்டால் வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நீதிமன்றம் தயங்காது என எச்சரித்த நீதிபதி, சரியான திசையில் திறமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு இறுதி வாய்ப்பாக ஒருவார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.