“5,000 குற்றச்சாட்டுகள்… அத்தனையும் புனைவுக் கதைகள்” – அமலாக்கத் துறையை விமர்சித்த கேஜ்ரிவால்

புதுடெல்லி: மதுபானக் கொள்கையில் மோசடி செய்ததன் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு கோவா தேர்தல் செலவுகளை ஆம் ஆத்மி எதிர்கொண்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சரமாரியாக பதில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை அமலாக்கப் பிரிவு 5,000 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை மாநில அரசுகளை நிலைகுலையச் செய்ய அல்லது மாநில அரசுகளை கவிழ்க்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊழலைத் தடுக்கும் அதன் நோக்கத்திற்காக ஒருபோதும் அமலாக்கத் துறை செயல்பட்டதில்லை. அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகைகள் எல்லாமே வெறும் புனைவுக்கதை தான்” என்றார்.

புதிய குற்றச்சாட்டு: முன்னதாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள புதிய குற்றச்சாட்டில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், இண்டோ ஸ்பிரிட்ஸ் தலைவர் சமீர் மஹேந்திருவும் வீடியோ காலில் பேசினர். அதனை ஆம் ஆத்மி தொலைதொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர் உறுதி செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

மேலும், மதுபான கொள்கை ஊழலில் கிடைத்த பணத்தை ஆம் ஆத்மி கோவா தேர்தலுக்காக செலவழித்ததாகவும் அந்தக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவா தேர்தல் கள ஆய்வுக்காக ஆம் ஆத்மியின் ஆய்வுக் குழுவிற்கு ரூ.70 லட்சம் செலவழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதன்முறையாக அமலாக்கத் துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது நேரடி குற்றச்சாட்டை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபானக் கொள்கை வழக்கு பின்புலம்: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.

இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது. அதன்பேரில் மணிஷ் சிசோடியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் ஆக. 19-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிசோடியாவின் வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.