புதுடெல்லி: அதானி குழுமத்தில் பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி பெருமளவில் முதலீடு செய்துள்ளது. அதேபோல் அக்குழுமத்துக்கு பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ ரூ.21,000 கோடி கடன் வழங்கியுள்ளது. முறைகேடு புகார் காரணமாக தற்போது அதானி குழுமம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயின் பங்கு மதிப்புகள் சரிந்துள்ளன.
இந்நிலையில், அதானி குழுமத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்திருப்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தக் கோரி பிப்ரவரி 6-ம் தேதி நாடு முழுவதும் உள்ள எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கியின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பிரிவுகளுக்கு அக்கட்சி பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாவட்டம், ஊர், பஞ்சாயத்து அளவில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துமாறு கட்சியின் மாநிலப் பிரிவுகளுக்கு இந்தச் சுற்றறிக்கையில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.போராட்டத்தின்போது “அதானி முறைகேடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைக்கும்படி சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “பாஜக தலைமையிலான மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களை கட்டாயப்படுத்தி மக்கள் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய வைத்திருக்கிறது. இது குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். ஆனால், மத்திய அரசு பதிலளிக்கவில்லை. மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணம், பாஜக அரசால் இப்போது ஆபத்தில் இருக்கிறது. இதனால், இந்த விவகாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
அதானி குழுமம் பங்கு முறைகேடு, வரி ஏய்ப்பு, பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி அதிகம் கடன் பெறுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், ஜன. 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த ஒரு வாரமாக சரிந்து வருகிறது. இதுவரை அக்குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி சரிந்தது. இதனால், அதானி குழுமத்தில் ரூ.81,000 கோடியாக இருந்த எல்ஐசியின் முதலீட்டு மதிப்பு ரூ.43,000 கோடியாக சரிந்துள்ளது. இது தவிர்த்து எல்ஐசியின் பங்கு மதிப்பும் சரிந்துள்ளது. அதேபோல் அதானி குழுமத்துக்கு கடன் வழங்கிய எஸ்பிஐயின் பங்கு மதிப்பும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்திய வங்கிகள் அதானி குழுமத்துக்கு ரூ.82,000 கோடி கடன் வழங்கியுள்ளன. இதில் எஸ்பிஐயின் பங்கு ரூ.21,000 கோடி ஆகும். இந்நிலையில், வங்கிகள் அதானி குழுமத்துக்கு வழங்கிய கடன் விவரங்களை அறிக்கையாக சமர்பிக்கும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இழப்பீடு கோரி வழக்கு: இந்நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் “ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்தியப் பங்குச் சந்தை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. அதானி குழுமத்தில் முதலீடு செய்த மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே வாரத்தில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு: ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியாகுவதற்கு முன்பாக அதானி குழமத்தின் பங்கு மதிப்பு ரூ.19.31 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது அது 51% சரிந்து ரூ.9.31 லட்சம் கோடியாக உள்ளது. இந்நிலையில் உலக பில்லியனர்கள் பட்டியலில் 2-வது இடத்திலிருந்த கவுதம் அதானி 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
நேற்றைய வர்த்தகத்தில் அதானி டிரான்ஸ்மிஷன் 10%, அதானி கிரீன் எனர்ஜி 10 சதவீதம், அதானி பவர், அதானி டோடல் கேஸ், அதானி வில்மர் உள்ளிட்ட நிறுவனங்கள் தலா 5 %, அதானி எண்டர்பிரைசஸ் 2.20% என்ற அளவில் சரிந்தன.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே அவருக்கும் கவுதம் அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது என்றும், மோடி பிரதமராக பதவிக்கு வந்த பிறகு அதானி குழுமத்தின் வளர்ச்சி மிகப் பெரும் அளவில் அதிகரிக்கத் தொடங்கியது என்றும், எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், “என்னுடைய தொழில் வெற்றி எந்தவொரு தலைவரின் உதவியால் நிகழ்ந்ததல்ல. பிரதமர் மோடியும் நானும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவருடன் என்னை தொடர்புபடுத்திப் பேசுகிறார்கள்” என்று அதானி கூறியுள்ளார்.