சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜன.31-ம் தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் பிப்.7-ம் தேதி முடிவடைகிறது. வாக்குப்பதிவு பிப்.27-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவுறுத்தலின்படி மாவட்டத் தேர்தல் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹூ கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டு, வரும் 13-ம் தேதி முதல் ஈரோட்டுக்கு வரவுள்ளனர். தேர்தல் கூட்டத்தில் பணப்பட்டுவாடா தொடர்பான பேச்சு குறித்த பாஜகவின் புகார் மற்றும் வீடியோ ஆதாரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக டிஜிபிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வீடியோவில் அவர்கள் பேசியது உண்மைதானா, அதில் ஏதேனும் தவறு உள்ளதா என்பதை தடயவியல் சோதனை உள்ளிட்டவற்றின் படி அறிந்து அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு அனுப்பப்படும். அத்துடன், தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வாக்காளர் கூடுதலாக சேர்ப்பு குறித்து அதிமுக அளித்த புகாரில் எந்த பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களைக் கேட்டுள்ளோம். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.