சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம்

பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் பாண்டிராஜ். அதன் பிறகு வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கதகளி உள்பட பல படங்களை இயக்கினார். கடைகுட்டி சிங்கம்தான் அவர் கடைசியாக கொடுத்த வெற்றிப் படம். அதன் பிறகு அவர் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது கையில் படம் எதுவும் இல்லாத பாண்டிராஜ் தனது சொந்த ஊரான திருமயத்தில் முழுநேர விவசாயி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இதுகுறித்து அவர் பேசியதாவது: என் நண்பன் ஒரு நாள் நீ தேசிய விருது முதல் பல விருதுகளையும் வாங்கி விட்டாய். பெரிய நாயகர்களைக் கொண்ட படம் இயக்கி விட்டாய். இதனால் உனது பெற்றோர்களின் ஆத்மா சாந்தியடையுமா என்று கேட்டான். அவர்கள் சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள் என்று கூறினேன். அவர்கள் விவசாயம் செய்த நிலம் வீணாக கிடக்கிறது. அதை பார்க்கும்போது அவர்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று கேட்ட ஒரு கேள்விதான் என்னை சென்டிமெண்டாக விவசாயத்தை செய்ய வேண்டும் என்று முடிவை தீர்க்கமாக எடுக்க வைத்தது.

எங்களது நிலத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. எனது பெற்றோர் வாழ்ந்த நிலம் பாழாய் இருந்தது. அங்கே மது அருந்திவிட்டு பாட்டில் போட்டு செல்கிறார்கள், சாராயம் காய்ச்சுகிறார்கள். அதனால் நான் அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து துவங்கினேன். நிறைய சிக்கல்களை சந்தித்தேன். வேலி இல்லை, கிணற்றில் தண்ணீர் இல்லை, என பல தடைகளை தாண்டவே பணமும், உழைப்பும் செலவானது. சுற்றி இருந்தவர்களும், எனக்கு விவசாயத்தில் அதிர்ஷ்டம் இல்லை என கூற ஆரம்பித்தார்கள். ஆனால் விடாது அதில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்த பிறகு, நிலத்திற்கு நீர் வந்தது.

இதை எல்லாம் பார்க்கும் போது, இத்தனை ஆண்டுகளாக விவசாயிகள் எதையும் எதிர்பாராமல் இதற்காக தான் உழைத்து இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அவர்கள் அதை தாண்டி பயிரை விளையவைத்து நமக்கு கொடுக்க பாடுபடுகிறார்கள். விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் தொடர்ந்து விவசாயிகள் அதையே தான் செய்கிறார்கள். இந்த வருடமாவது லாபம் பார்த்து விடுவோம் என்று மனம் தளராமல் இருப்பதுதான் விவசாயத்தின் சக்தி.

இந்த வருடம் 114 மூட்டை நெல் அறுவடை செய்தேன். எனது மனைவி அறுவடை செய்யும் வரை ஆனா செலவை ஒரு டைரியில் எழுதி வைத்திருந்தார். நெல் விற்று பணத்தை கணக்கிட்டு இந்த வருடம் நமக்கு லாபம் என்று கூறினார். சினிமா எடுத்து பல கோடிகள் சம்பாதித்து கிடைத்த மகிழ்ச்சியை விட, விவசாயம் மூலம் வரும் நெல்லில் சாப்பிடும் போது அதிகமான மகிழ்ச்சி கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.