ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மண்டல். இவர் சென்னை வேளச்சேரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி ரமேஷ் தன்னுடன் பணியாற்றும் சக தொழிலாளிகளுடன் சமையலுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள்களை வாங்கிக்கொண்டு, தான் தங்கியிருக்கும் பகுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அந்தப் பகுதியில் இளைஞர்கள் சிலர், சாலையில் நின்று நடனமாடிக்கொண்டிருந்தனர். அதில், ஒரு இளைஞரின் கால் ரமேஷின் மீது பட்டிருக்கிறது. இதனால், கோபமடைந்த ரமேஷ் அந்த இளைஞரை, தான் வாங்கி வைத்திருந்த முருங்கைக் காயை எடுத்து அடித்திருக்கிறார். ரமேஷின் செயலால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் ரமேஷ் உட்பட அங்கிருந்த வடமாநிலத் தொழிலாளிகளைத் தாக்கியிருக்கிறார்கள்.
இரண்டு தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒரு இளைஞன் அங்கிருந்த கட்டையை எடுத்து ரமேஷின் தலையில் அடித்ததில், அவர் பலத்த காயமடைந்தார். இதனைக் கண்ட இளைஞர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர். படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சையிலிருந்த ரமேஷ் நேற்று காலை உயிரிழந்தார்.

சம்பவமறிந்து வந்த வேளச்சேரி பகுதி போலீஸார் ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். ரமேஷை தாக்கிய இரண்டு கல்லூரி மாணவர்கள், ஏழு சிறுவர்களை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, அந்த ஏழு சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்திலும், இரண்டு கல்லூரி மாணவர்களை புழல் சிறையிலும் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.