தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- “ஒவ்வொரு வருடமும் தை மாதம் பூசம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படும் விழா தைப்பூசம்.
இந்த விழா இந்தியாவில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் மொரிசியஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், சில நாடுகளில் இந்த விழாவிற்கு அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழா முருகப்பெருமான் குடிகொண்டுள்ள திருத்தலங்களில் மிகக் கோலாகலமாக அதிலும் குறிப்பாக அறுபடை வீடுகளில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைப்பூச நாளன்று, பழனியில் பக்தர்கள் காவடிகள் எடுத்து தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். அதே போல், வருகிற ஐந்தாம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் ராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற உள்ளது.
இதில், ஒவ்வொருவருடமும் லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதிலிருந்து வந்து இந்த ஜோதி தரிசனத்தை தரிசனம் செய்வார்கள். ஆகவே, தமிழக அரசு சென்னை மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் வரும் 5-ம் தேதி டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.