சென்னை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். 24 வயதான இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற இவர் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில், பாலவாக்கம், அண்ணாசாலை பகுதியில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும்போது போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராகவேந்திரன் ஆத்திரத்தில் அங்கிருந்த பாலாஜி என்பவரைத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்த பாலாஜி, விவேக், அஜய், நிஜாமுதீன் ஆகிய நால்வரும் சேர்ந்து ராகவேந்திரனை தாக்கியுள்ளார். ஒருவழியாக அந்த இடத்திலிருந்து தப்பித்து வந்த ராகவேந்திரன் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ஆனால், அவரை அந்த நால்வரும் பைக்கில் பின்தொடர்ந்து வந்துள்ளார்.
சமயம் பார்த்து ஒரு காலி இடத்தில் ராகவேந்திரனை வழிமறைந்து தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்திருக்கிறார்கள். பொதுமக்கள் வருவதை பார்த்த நால்வரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை பகுதி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ராகவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து நீலாங்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்த வழக்கில், பாலாஜி, விவேக், அஜய், நிஜாமுதீன் ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணை தெரியவந்தது. மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் உடனிருந்தவரையே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.