
இந்தியன் எக்ஸ்பிரஸ் விருதுக்கு அதானி முதன்மை ஸ்பான்சர் என்பதால், அந்த விருது வேண்டாம் என்று தமிழ்நாட்டை சேர்ந்த பெண் கவிஞர் சுகிர்தா ராணி தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ‘தேவி’ விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான தேவி விருதுகள் கவிஞர் சுகிர்தராணி உள்ளிட்ட 12 பெண் ஆளுமைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் விருதுக்காக நன்றி தெரிவித்துவிட்டு, அந்த விருதை வாங்க மறுப்பதாக கவிஞர் சுகிர்தராணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அதில், விருது மறுப்பு அறிவிப்பு. நண்பர்களுக்கு வணக்கம். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பெண் ஆளுமைகளைச் தேர்ந்தெடுத்து ‘Devi Award ‘ வழங்குகிறது.
இலக்கியம் மற்றும் தலித் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வரும் என் சமூகப் பங்களிப்பிற்காக, ‘ Devi Award’ எனக்கு வழங்கப்படுகிறது. அதற்காக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு என் நன்றி. விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 8 ந்தேதி புதன்கிழமை சென்னை ITC Grand Chola Hotel ல் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பது நேற்றுதான் எனக்குத் தெரிய வந்தது. நான் பேசும் அரசியலுக்கும் கொண்ட கொள்கைக்கும் சிந்தனைக்கும் அதானி நிதி உதவி அளிக்கும் ஓர் அமைப்பிலிருந்தோ நிகழ்ச்சியிலிருந்தோ விருது பெறுவது எனக்கு சிறிதும் உவப்பில்லை.
எனவே இந்த தேவி விருது பெறுவதை மறுக்கிறேன்.இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் என் விருது மறுப்பை முறைப்படி இன்று மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்து விட்டேன். நான் எப்போதும் என் அரசியல் தெளிவு மற்றும் தெரிவிலிருந்து விலகிச் செல்ல மாட்டேன் என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, என குறிப்பிட்டுள்ளார்.
newstm.in