களமிறங்கும் "கர்நாடக சிங்கம்"… காங்கிரசுக்கு செக் வைக்க பக்கா பிளான்?

கர்நாடக மாநிலத்தில், பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வருடம் மே மாதத்திற்குள் 224 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், ஆளும் கட்சியான பாஜக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இந்த முறை கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என பல மாதங்களுக்கு முன்பு இருந்தே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கர்நாடக தேர்தலில் புதிய பொறுப்பை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா வழங்கியுள்ளார். இது குறித்து பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலையை கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக நியமித்துள்ளார்.

கர்நாடகாவில் 9 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, 2020 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். 2021 ஆம் ஆண்டில் இவருக்கு தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. இவரை “கர்நாடக சிங்கம்” என்றும் அழைப்பதுண்டு. கர்நாடகாவில் பணியாற்றியதால் அங்கு இருக்கும் அரசியல் சூழ்நிலை தெரியும் என்பதால் அண்ணாமலைக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையை முடித்துள்ளார். ராகுலின் இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உத்வேகம் தந்ததோடு, இது தேர்தலிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்பாகவே கர்நாடக தேர்தலுக்கான வார் ரூம் பொறுப்பாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை நியமித்து பணிகளை தொடங்கியது. தமிழகத்தின், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சசிகாந்த் செந்தில், கர்நாடக மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு உட்பட பல பதவிகள் வகித்தவர். 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து 2019ல் விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பின் 2020ல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தை சேர்ந்த இருவரை கர்நாடக தேர்தலுக்கான பொறுப்பாளராக நியமித்துள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இருவருக்கும் பல ஒற்றுமை இருப்பது மேலும் சுவாரசியம். அண்ணாமலை மற்றும் சசிகாந்த் செந்தில் ஆகிய இருவரும் கர்நாடகாவில் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் ஆக பணியாற்றிய தமிழர்கள். இருவரும் விருப்ப ஓய்வு பெற்று, காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இணைந்தவர்கள். 2020 ஆம் ஆண்டில் தான் இருவரது கட்சி பணிகளும் தொடங்கப்பட்டது.

இவ்வாறு இருக்க, காங்கிரசால் களம் இறக்கப்பட்ட சசிகாந்த் செந்திலுக்கு அடுத்து, பாஜகவின் சார்பில் அண்ணாமலையும் களம் இறக்கப்பட்டது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் மட்டும் இல்லாமல், தமிழகத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.