”சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்துங்கள்”-இயக்குநர் வெற்றிமாறன் பேச்சால் சூடுபிடித்த விவாதம்!

இயக்குநர் வெற்றிமாறன் பள்ளிக் கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது சரியா என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சுக்கள் வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறனிடம், “அனைத்து சாதிகளும் சமம் என்று அரசே சொல்கிறது. இருந்தப்போதிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிவங்களில் சாதியைக் கண்டிப்பாக நிரப்ப வேண்டும் என்கிறார்களே” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது எனக்கே கொடுமையான விஷயம் தான். நானே எனது பிள்ளைகளுக்கு எந்த சாதியும் அற்றவர் என்ற சான்றிதழைப் பெற முயன்றேன். இருப்பினும், அப்படித் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இது குறித்து நீதிமன்றத்திற்கும் போய் பார்த்தேன். அங்கும் நிச்சயம் எதாவது சாதியைக் குறிப்பிட வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இந்து என்று போடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

image

எதுவும் வேண்டாம் என்று சொன்ன போதும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. சாதியற்றவர்கள் என்ற சான்றிதழ் பெறப்பட்ட வேறு சில சம்பவங்களையும் குறிப்பிட்டோம். அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்தவொரு இடத்திலும் சாதி சான்றிதழ் தராமல் இருக்கவே தேவையான வேலைகளைச் செய்து வருகிறேன். பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். யாருக்குத் தேவையில்லையோ அவர்களுக்கு அப்படியொரு ஆப்ஷன் இருக்க வேண்டும்.

அதேநேரம் யாருக்கு அது அவர்களின் உரிமையை வாங்கி தருகிறதோ. அதாவது Social Justice வாங்கித் தருகிறதோ, அந்த இடத்தில் அது தேவை என்றே நினைக்கிறேன். சமூக நீதிக்காக சில இடங்களில் அது தேவைப்படவே செய்கிறது. எனக்கு அது தேவைப்படவில்லை. அது வேண்டாம் என்று சொல்லும் உரிமையும், ஆப்ஷனும் எனக்கு இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால், அதேநேரம் அனைவராலும் ஒரே நேரத்தில் அப்படித் தூக்கிப் போட்டு விட முடியாது. சமூக நீதியை நிலைநாட்ட அது தேவைப்படவே செய்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு ஆதரவு கிளம்பியபோதும், சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இது குறித்து கவிஞர் சல்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “சாதிச்சான்றிதலால் தான் சாதி இருக்கிறது என்கிற புரிதல். வெற்றிமாறன் போன்றவர்களிடமே இருக்கிறது என்பது வியப்பளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் அமீர் ஒருமுறை பேசுகையில், சாதிச் சான்றிதழை கிழித்துப் போட தயாரா என பேசியது விவாதமானது. சாதிச் சான்றிதழை வைத்துக் கொண்டு சாதி ஒழிப்பை பேசுவது எப்படி சரியாக இருக்கும் என்று அவர் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார். அமீரின் இந்த பேச்சுக்கு சிலர் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பின்னர் தன்னுடைய புரிதல் தவறானது என்று மற்றொரு பேட்டி விளக்கி இருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.