தூத்துக்குடி மாவட்டத்தில் கியாஸ் கசிந்து தீப்பிடித்த விபத்தில் கணவன்-மனைவி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் சண்முகபாண்டி (73). இவரது மனைவி ராஜலட்சுமி (62). இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை ராஜலட்சுமி டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அப்பொழுது கியாஸ் கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது. இதில் கணவன்-மனைவி இருவர் மீதும் தீ பிடித்துள்ளது. இதையடுத்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலத்த தீ காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.