பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு

சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உயிரிழந்தார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் வீட்டில் மயங்கி நிலையில் உயிரிழந்து கிடந்தார். வழுக்கி வழுந்ததில் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். “வீட்டுக்கு வந்த மருமகள்” என்ற படத்தில் பாடகர் டி எம் சௌந்தர்ராஜனோடு இவர் சேர்ந்து பாடிய ஜோடிப்பாடலான 'ஓரிடம் உன்னிடம் நான் கேட்பது' என்ற பாடலே இவர் பாடி தமிழில் வெளிவந்த முதல் திரைப்பட பாடலாகும். 'மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை இவர் பாடி உள்ளார்.

தமிழில் எம்எஸ் விஸ்வநாதன் துவங்கி ஏஆர் ரஹ்மான் வரை பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒரியா, குஜராத்தி என 19 மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஏராளமான பக்திப் பாடல்களும் தனி ஆல்பங்களாக இவரது குரலில் வெளிவந்திருக்கின்றன.

கடந்தவாரம் தான் மத்திய அரசு இவரின் கலைச்சேவையை பாராட்டி பத்மபூஷண் விருது வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அந்த விருதை பெறும் முன்பே அவர் மறைந்தது திரையுலக ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். வாணி ஜெயராம் உடல் சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

கவர்னர் அஞ்சலி

மறைந்த வாணி ஜெயராம் உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்என் ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் இரங்கல்
திறமையான வாணி ஜெயராம் ஜி மெல்லிசை குரல் மற்றும் பல மொழிகளை உள்ளடக்கிய மற்றும் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் செழுமையான படைப்புகளுக்காக நினைவு கூறப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.