லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு லியோ என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் புரோமோ ப்ளடி ஸ்வீட் என்ற பெயரில் நேற்று வெளியாகி இன்று இரண்டரை கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்படத்தில் விஜய் சொல்லும் ‘ப்ளடி ஸ்வீட்’ என்ற வசனத்தை வைத்து மீம்கள் தூள் கிளப்புகின்றன.
விஜய், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் 3 நிமிட புரோமோ மிரட்டலாகவும், கிளாஸாகவும் வெளிவந்துள்ளது. மனோஜ் பரமஹம்சாவின் கேமரா, எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் ஆர்ட் டைரக்டர் என். சதீஷ் குமாரின் கைவண்ணம் இதற்கு உதவியுள்ளது. புரோமோவிற்கான ‘ஐம் பையர்ப்ரூப்’ என்ற ஆங்கிலப் பாடலை ஹெய்சன்பர்க் எழுதியுள்ளார். அதனை அனிருத் கம்போஸ் செய்து பாடியுள்ளார். அவருடன் சித்தார்த் பஸ்ரூரும் இணைந்திருக்கிறார்.
புரோமோவை பலரும் பார்த்திருப்பீர்கள் டிப் டாப்பாக ஒரு விஜய் சாக்கோ கொட்டைகளை தரம் பார்த்துக்கொண்டிருக்க, மற்றொரு விஜய் லென்ஸ் கண்களுடன் இரும்பை பதம் பார்த்துக் கொண்டிருப்பார். டபுள் ஆக்டிங்கா என்பது தெரியவில்லை. இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளும் ஒரே விஜயாகக் கூட இருக்கலாம். இறுதியில் சாக்லேட் கூழில் இரும்பை மூழ்கடித்து எடுத்து, அதில் வழியும் சாக்லேட்டை ‘ப்ளடி ஸ்வீட்’ என்றபடி விஜய் ருசிப்பது போல் புரோமோ முடிந்திருக்கும்.
இந்த ப்ளடி ஸ்வீட்டை மீம் கிரியேட்டர்கள் பிடித்துக்கொண்டனர். பெங்களூருவில் இட்லிக்கு, சாம்பாரை தொட்டுவிட்டு, ப்ளடி ஸ்வீட் என்பது போல் ஒருவர் மீம் போட்டுள்ளார். மற்றொருவர் கேரள பிரியாணியை சுவைத்துவிட்டு ப்ளடி ஸ்வீட் என சலித்துக்கொள்கிறார். காதலியை, காதலன் ப்ளடி ஸ்வீட் என்றழைப்பதாக ஒருவர் ரொமான்டிக் மீம் உருவாக்கியுள்ளார். இன்னும் சில நாட்களில் இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement