வெற்றி, தோல்விகளில் இருந்து அனுபவம் பெற்றேன் : 10 ஆண்டு பயணத்திற்கு கவுதம் கார்த்திக் நன்றி

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். 2012ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரங்கூன், முத்துராமலிங்கம், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் கார்த்திக்கால் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது 1947, பத்து தல, கிரிமினல் படங்களில் நடித்து வருகிறார்.

கவுதம் கார்த்திக் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் நடித்து வரும் கிரிமினல் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினார்கள். திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி அவர் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் முதல் படமான கடல் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த அழகான வாய்ப்பை வழங்கிய மணி சாருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து பணிபுரியும் பாக்கியம் அளித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு எனது முழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் இல்லாமல் நான் இன்று இங்கு இருக்க மாட்டேன்.

இந்த பயணம் உற்சாகமாகவும், உயர்வாகவும், திகிலூட்டுவதாகவும், சவாலாகவும், அற்புதமாகவும், அறிவூட்டுவதாகவும் இருந்தது. ஆனால் இதையெல்லாம் விட, இது ஒரு அதிசயமான பயணம். ஒரு நடிகனாக உங்கள் முன் நின்று உங்களை மகிழ்விக்க நீங்கள் அனைவரும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது பணியின் மீது தொடர்ந்து நீங்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

என்னுடைய எல்லா உயர்வுகளிலும், எல்லா தாழ்வுகளிலும், என் எல்லா தவறுகளிலும், என்னுடைய எல்லா வெற்றிகளிலும் நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நான் பெற்ற அனைத்து வெற்றிகள் மற்றும் தோல்விகள் மூலம், கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி, உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன். கடந்த 10 ஆண்டுகளாக என்னுடன் நின்றதற்கும் என்னை நம்பியதற்கும் அனைவருக்கும் நன்றி. என் வாழ்க்கையில் உங்கள் அனைவரையும் பெற்றதற்காக நான் உண்மையிலேயே பாக்கியவானாக இருக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.