பிரேசிலைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர், நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை மூலமாக இவருக்கு குழந்தை பிறந்தநிலையில், குழந்தை இரண்டடி உயரத்தில், 7.3 கிலோ கிராம் எடையோடு இருந்துள்ளது. இக்குழந்தைக்கு `ஆங்கர்சன் சாண்டோஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “குழந்தையின் தாய், கடுமையான நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அறுவை சிகிச்சை மூலமாக இவருக்குப் பிறந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. குழந்தை இரண்டடி உயரமும், 7.3 கிலோ எடையுடனும் இருக்கிறது.
4 கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தைகள் மேக்ரோசோமியாவால் (Macrosomia) பாதிக்கப்படுவதுண்டு. இதற்கு கிரேக்க மொழியில் `பெரிய உடல்’ என்று பொருள். தாயின் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகரிப்பால், சிசுவுக்குச் செல்லும் குளுக்கோஸ் அளவு அதிகரித்து இருக்கிறது.

இதனால் குழந்தை அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் மேக்ரோசோமியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தாயின் நீரிழிவு நோயே குழந்தையின் இப்பிரச்னைக்கு காரணம்’’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகையில், “குழந்தை பிறக்கையில், ஆண் குழந்தைகளின் உடல் எடை 3.3 கிலோவும், பெண் குழந்தைகளின் உடல் எடை 3.2 கிலோவும் இருக்கும். அதிகப்படியாக 10 கிலோ எடை கொண்ட குழந்தை 1955-ம் வருடம் இத்தாலியில் பிறந்துள்ளது. தற்போது இந்தக் குழந்தை அதிகப்படியான எடையோடு பிறந்துள்ளது’’ என்று கூறியுள்ளனர்.