திருவாரூர்: “2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இவற்றுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மழையால் பாதித்த சம்பா தாலடி நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இலங்கை பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழையால் தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 10 லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி பயிர்களில் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை நடைபெற்று முடிந்துள்ளது.
மீதமுள்ள ஏழரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் திருவாரூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர், நாகப்பட்டினத்தில் 50,000, மயிலாடுதுறையில் 40,000, தஞ்சாவூரில் முப்பதாயிரம் ஏக்கர் உள்ளிட்ட 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
ஏற்கெனவே, அறுவடை செய்யப்பட்டு நெல் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. எனவே விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகம் நிர்ணயித்த செலவு தொகையின் அடிப்படையில் ஐம்பதாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பயிர் இன்சூரன்ஸ் தொகை ஏக்கருக்கு ரூ.32,500 வழங்க வேண்டும். இது தவிர சேதம் அடைந்துள்ள உளுந்து பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறினார்.