சபரிமலையில் மலை போல் குவிந்த நாணயங்கள் எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது: 520 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மலை போல் குவிந்து கிடக்கும் நாணயங்களை எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது. இதில் 520 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்து முடிந்த மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.    இதனால் இம்முறை கோயில் வருமானம் அதிகரித்தது. இதுவரை கிடைத்த மொத்த வருமானம் ரூ.351 கோடியை தாண்டியுள்ளது. சபரிமலை கோயில் வரலாற்றில் மண்டல, மகரவிளக்கு சீசனில் வருமானம் ரூ.300 கோடியை தாண்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை நாணயங்களும் அதிக அளவில் கிடைத்துள்ளன. கோயில் நடை திறந்த நவம்பர் 16ம் தேதி முதல் நாணயங்களை எண்ணும் பணியில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வழக்கமாக மகரவிளக்கு பூஜை முடிந்து நடை சாத்தப்படும்போது நாணயங்களை எண்ணுவது முடிவடைந்து விடும். ஆனால் இம்முறை அதிக அளவில் நாணயங்கள் குவிந்ததால் அவற்றை எண்ணும் பணி முடியவில்லை. இதற்கிடையே இப்பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த ஜனவரி 25ம் தேதியுடன் நாணயங்கள் எண்ணுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதல் நாணயங்கள் எண்ணிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது. இப்பணியில் 520 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலையில்  3 அறைகளில் மலை போல நாணயங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எண்ண வேண்டிய நாணயங்கள் மட்டுமே ரூ.20 கோடிக்கு மேல் வரும் என்று கருதப்படுகிறது. இவற்றை எண்ணி முடிக்க இன்னும் ஒரு வாரம் ஆகும்  என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.