திருப்பூரில் பனியன் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் டெய்லர் வேலைக்கு தமிழர்கள் தேவை என விளம்பர பதாகை: சமூக வலைதளத்தில் வைரல்

திருப்பூர்: திருப்பூரில் டெய்லர் வேலைக்கு தமிழர்கள் மட்டும் தேவை என வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் பகுதியில்  பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங்,  காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை  பகுதியில் விவசாயமும், காங்கயம் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள்  நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது. இந்த தொழில்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு  மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒரிசா, பீகார், உத்தரபிரதேசம்  உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு  பகுதிகளில் பரவலாக வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி இங்குள்ள நிறுவனங்களில்  பணியாற்றி வருகின்றனர். தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு  வரும் ரயில்களில்  சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக  வருகின்றார்கள்.

இடைத்தரகர்கள் மூலம் ரயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி  இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகின்றார்கள். இந்த நிலையில், கடந்த 14ம் தேதி திருப்பூர் திலகர் நகர் பகுதியில்  வடமாநிலத்தவர்கள் மற்றும் தமிழர்கள் சண்டையிட்டு கொள்வதாக ஒரு வீடியோ  வைரலானது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட  முற்பட்டனர். இதனை தொடர்ந்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  வடமாநிலத்தவர்கள் 2 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக  சிலரை தேடி வருகின்றனர். அதற்குள்ளாக மாஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி  ஒன்றில் வடமாநிலத்தவர்கள் பாக்கு போட்டு எச்சில் உமிழ்வதாக கூறி தகராறு  ஏற்பட இருந்தது. இதனை வடக்கு போலீசார் சாமார்த்தியமாக தடுத்தனர். அதேபோல்  பெருமாநல்லூர் பொங்குபாளையம் பகுதியில் இரு சக்கர வாகனம் மோதி வடமாநில  வாலிபருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அப்போது சம்பத் என்பவரை அங்குள்ள  வடமாநிலத்தவர்கள் பிடித்து பணம் பெற்றுக்கொண்டு மேலும் இரு  சக்கர வாகனத்தையும் பிடுங்கி வைத்துள்ள வீடியோவும் சமூக வலைதளங்களில்  வைரலானது. இதையடுத்து வடமாநிலத்தவர்களை வேலைக்கு சேர்ப்பதில் இருந்து பலர் பின்வாங்கி வருகின்றனர். அந்த வகையில் ஒரு விளம்பர பதாகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு சிங்கர்  டெய்லர் வேலைக்கு தமிழர்கள் மட்டும் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலானோர் தங்கள் வாட்ஸ்அப்களில் ஸ்டேட்டஸ்
ஆக வைத்துள்ளனர். முகநூலிலும் பரவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.