கலைஞர் பேனா சின்னம்: சீமானுக்கு பாஜக ஆதரவு!

தைப்பூசத்தை முன்னிட்டு பாஜக சார்பாக மதுரை திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் வரை பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். பாதயாத்திரையில் பாஜக பெண் நிர்வாகிகள் பாடலுக்கு ஆடிய வண்ணம் நடந்து வந்தனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், “தமிழ்நாட்டினுடைய மூத்த அமைச்சர் தமிழ்நாட்டில் மூன்று முக்கிய கோயில்களை இடித்தேன் என்று வெளிப்படையாக பேசி தமிழக மக்களை காயப்படுத்தியுள்ளார். இதுபோன்ற இந்து மதங்களை ஏளனம் செய்பவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக இந்த யாத்திரை மேற்கொண்டுள்ளோம்.” என்றார்.

திருப்பரங்குன்றம் இரயில்வே தரைப்பாலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதே திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தலில் நான் போட்டியிட்டேன் ஆனால் அதில் வென்றவரிடம் கேள்வி கேட்காமல், நின்ற என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். நிச்சயமாக இது மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆவண செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

கலைஞர் நினைவு சின்னம் குறித்து பேசிய அவர், “எட்டு ரூபாய் பேனாவை ஆயுத பூஜைக்கு வைத்து சாமி கும்பிட்டால் அது மூடநம்பிக்கை என்றால், 80 கோடி ரூபாய்க்கு பேனா சிலையை வைத்தால் அதற்கு பெயர் என்ன நம்பிக்கை? கலைஞருக்கு கடற்கரையில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு விட்டது. கடலிலும் வைப்பேன் என்பது தவறு. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை குறிப்பிட்டு கன்னியாகுமரியில் 133 அடிக்கு திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. அதைவிட ஒரு அடி அதிகமாக வைப்பதற்கு கலைஞர் என்ன திருவள்ளுவரை விட பெரியவரா.?” என கேள்வி எழுப்பினார்.

சீமான்
பேசியதை நான் ஆதரிக்கிறேன் என்ற ராம சீனிவாசன், “நான் ஆட்சிக்கு வந்தால் அந்த சிலையை உடைப்பேன் என்றார். அவர் ஆட்சிக்கு வருவது நடக்காது ஆனால் அந்த உணர்வை நான் மதிக்கிறேன். கலைஞர் கருணாநிதி முத்தமிழை வித்தவர்தான் வித்தகர் இல்லை. இது சம்பந்தமாக திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளதா? தேர்தல் அறிக்கையில் வெளியிட்டதை நிறைவேற்றி விட்டார்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் அராஜகம் செய்யும். அதுவும் திமுகவை பற்றி சொல்ல வேண்டியதில்லை. வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். எங்களுடைய நோக்கம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். அதிமுக வேற கட்சி, பாஜக வேற கட்சி. சென்ற முறையும் அதிமுக கூட்டணியில் நின்ற வேட்பாளர் ஆதரித்தோம், அதேபோல இந்த முறையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்பவரை ஆதரிக்கிறோம். ஒருங்கிணைந்த ஒன்றுபட்ட வலிமையான அதிமுக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அது நிச்சயமாக நடக்கும்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.