தஞ்சாவூர்: தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்.1-ம் தேதி முதல் 3- ம் தேதி வரை பருவம் தவறி பெய்த மழையால், அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று காலை (பிப்.5) ஆய்வு செய்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில், கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, பருவம் தவறி பெய்த திடீர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தது.
மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து இருந்த நெல்களும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதையடுத்து,பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், கொள்முதலில் நெல் ஈரப்பதத்தினை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இதனை நேரடியாக ஆய்வு செய்ய, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவு, வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் அடங்கிய குழுவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
இதைத்தொடர்ந்து, இன்று (05ம்தேதி), உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் கிராமத்தில், அறுவடைக்கு தயாரான நிலையில், மழைநீரில் சாய்ந்த நெற்பயிர்களை பார்வையிட்டார். அவரிடம் விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை காண்பித்தனர். இதையடுத்து, உக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் அர.சக்கரபாணி கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உடனடியாக அறிக்கையை தயாரிக்கு வழங்குமாறு முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மழையினால் நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளதை விவசாயிகள் காட்டினர். மேலும் திருவாரூர் மாவட்டத்திலும் ஆய்வு செய்து, நாளை முதல்வரிடம் இந்த அறிக்கை வழங்கப்படும்.
கொள்முதல் நிலையங்களில் தற்போது 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் 22 சதவீதம் வரை தளர்வு வேண்டும் என விவசாயிகள் கேட்டுள்ளனர். இதை முதல்வரிடம் எடுத்துக் கூறப்படும். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதை எடுத்துக்கூறி காப்பீடுக்கான இழப்பீடும் பெற உரிய ஆலோசனையை முதல்வரிடம் எடுத்துரைக்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அந்தந்த மாவட்ட அதிகாரிகள் எடுத்த கணக்கின்படி 78 ஆயிரம் ஹெக்டேரில் நெல், உளுந்து, நிலக்கடலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடன் கலந்து பேசி அறிக்கையை தயாரித்து முதல்வரிடம் வழங்கப்படும் என்றார்.
ஆய்வின் போது, கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் சு.பிரபாகர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நா.உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா உடன் இருந்தனர்.