திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே துணிவு பட பாணியில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அலங்கியம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக்கு பர்தா அணிந்து வந்த நபர் ஒருவர், தன்னிடம் துப்பாக்கி, வெடிகுண்டு இருப்பதாக கூறி வங்கி ஊழியர்கள் மற்றும் மக்களை மிரட்டியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அவர் கொள்ளை அடிக்க முயற்சித்த போது, வங்கிக்குள் இருந்த வாடிக்கையாளர்கள் இளைஞரின் தலையில் தாக்கி அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் சோதனை செய்ததில் அவரிடமிருந்தது பொம்மை துப்பாக்கி என தெரியவந்தது.
அவர் வைத்திருந்த வெடிகுண்டும் போலியானது என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு வந்தனர்.
பர்தா அணிந்திருந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அலங்கியம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (19) என்பதும், பாலிடெக்னிக் 2ஆம் ஆண்டு பயின்று வருவதும் தெரியவந்தது.
பர்தா, முகமூடி, பொம்மை துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அவருக்கு உடந்தையாக வேறு நபர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் தாக்கியதால் தலையில் காயமடைந்த சுரேஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in