மோசடி வழக்கில் வில்லன் நடிகர் பாபுராஜ் கைது

மலையாள திரையுலகில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் பாபுராஜ். சமீப காலமாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் இவர், சில படங்களையும் இயக்கியுள்ளார். 90களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த வாணி விஸ்வநாத்தின் கணவர் இவர்தான். தமிழில் விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஷால் நடித்த வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் கூட வில்லனாக நடித்திருந்தார் பாபுராஜ். இந்த நிலையில் தற்போது மோசடி வழக்கு ஒன்றில் கேரள போலீசார் நடிகர் பாபுராஜை கைது செய்துள்ளனர்.

பாபுராஜுக்கு கேரளாவில் மூணாறு பகுதியில் சொந்தமாக சொகுசு ரிசார்ட் ஒன்று உள்ளது. இதை கடந்த 2020ல் அருண் என்பவர் 40 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து மாதம் 3 லட்சம் வாடகை என்கிற கணக்கில் காண்ட்ராக்ட் எடுத்தார். ஆனால் சில நாட்களிலேயே கொரோனா தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட பல மாதங்கள் இந்த ரிசார்ட் செயல்படாமல் இருந்தது. நிலைமை சரியானதும், ரிசார்ட்டை மீண்டும் செயல்படுத்த முயற்சித்தபோது தொழில்நுட்ப ரீதியாக பல பிரச்சினைகள் அங்கே இருந்தன. அதை சரி செய்து தர பாபுராஜ் மறுத்துவிட்டார்.

அதுமட்டுமல்ல அந்த ரிசார்ட் அமைந்திருந்த இடம் அந்தப்பகுதியில் உள்ள வேறு ஒரு அமைப்புக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் வருமான வரி துறையினர் அந்த நிலத்தை மீட்கும் முயற்சியில் இறங்கி இருந்தனர். இந்த விவரங்களை எல்லாம் பாபுராஜ் தன்னிடம் மறைத்து விட்டார் என்பதாலும் பிரச்னைகள் நிறைந்த இந்த ரிசார்ட்டை தொடர்ந்து நடத்த தான் விரும்பவில்லை என்றும் கூறி பாபுராஜிடம் தான் கொடுத்த முன்தொகை பணத்தை திரும்ப கேட்டுள்ளார் அருண்.

ஆனால் பாபுராஜ் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுக்கவே, அவர் மீது அடிமாலி காவல் நிலையத்தில் அருண் புகார் கொடுத்தார். அந்த சமயத்தில் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார் பாபுராஜ். அதன்பிறகு நீதிமன்றம் குறிப்பிட்ட தேதியில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாத பாபுராஜுக்கு பிப்ரவரி நான்காம் தேதி போலீசார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்படி விசாரணைக்கு வந்தபோது பாபுராஜ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அடிமாலி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை ஆகியுள்ளார் பாபுராஜ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.