ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: தமிழகத்தில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், இது தொடர்பாக ஆளுநருக்கு அரசு அழுத்தம் தரவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 42 ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 13-ஆவது தற்கொலை இது. இதுவரை நடந்த தற்கொலைகளுக்கும், இந்த தற்கொலைக்கும். ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 112 நாட்கள் ஆகிவிட்டன. அது குறித்து ஆளுநர் எழுப்பிய ஐயங்களுக்கு, சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் விளக்கம் அளித்து 68 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் சட்டத்திற்கு இன்று வரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையல்ல.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த அரசின் விளக்கங்கள் மனநிறைவு அளித்தால் ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் திருப்பி அனுப்ப வேண்டும். இரண்டையும் செய்யாமல் சட்டத்தை கிடப்பில் போட்டு, ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது.

தமிழகத்தில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இது தொடர்பாக ஆளுநருக்கு அரசு அழுத்தம் தரவேண்டும்; இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.