புதுடெல்லி: தூங்கும் வசதியுடன் (ஸ்லீப்பர் பெர்த்) கூடிய வந்தே பாரத் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது. 2026-ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் நாட்டின் முதல் புல்லட் ரயிலின் தொடக்க ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, அகமதாபாத்- மும்பை புல்லட் ரயில் திட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெறுகின்றன. இந்த ரயில்களுக்கான டெண்டர் இந்த ஆண்டு வெளியிடப்படும். தற்போதைய வந்தே பாரத் ரயில்கள் 500-600 கி.மீ. பயணத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உள்ளன.
புல்லட் ரயில் திட்டத்தை செயல் படுத்த 140 கி.மீ. வழித்தடத்தில் தூண்கள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் எட்டு ஆறுகளில் நீண்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் 13 ரயில் நிலையங்களும் புல்லட் ரயில் சேவைக்கு கிட்டத்தட்ட தயாராகி விட்டன. இந்த வழித்தடத்தில் புல்லட் ரயிலை மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும்.
வந்தே மெட்ரோ
பிரதமர் கேட்டுக் கொண்டபடி, வந்தே பாரத் ரயிலின் வெற்றிகர மான அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் வந்தே மெட்ரோ ரயிலுக்கான முன்மாதிரியை இன்னும் 12 முதல் 16 மாதங்களுக்குள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
வந்தே பாரத் ரயில்களுக்கு இணையாக, அருகிலுள்ள இரண்டு பெரிய ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் வகையில் “வந்தே மெட்ரோ” திட்டத்தை செயல்படுத்துமாறு ரயில்வே அமைச்சகத்திடம் பிரதமர் கோரியிருந்தார். அதனைப் பின்பற்றி இந்த திட்டத்தை செயலாக்கத்துக்கு கொண்டு வர ரயில்வே அமைச்சகம் முனைப்புடன் செயல்படுகிறது.
ரயில்வே கடந்த ஆண்டு உணவு தானியங்கள், உரங்கள் மற்றும் பல பொருட்களின் போக்குவரத்தில் ரூ.59,000 கோடி மதிப்பிலான மானியங்களை வழங்கியுள்ளது. இது ஒவ்வொரு ரயில் பயணிக்கும் 55 சதவீத சலுகை அளிப்பதற்கு சமமானதாகும்.
ரயில்வே தனியார்மயமாக்கப் பட உள்ளதாக வெளியாகும் செய்தி கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. ரயில்வே துறைக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. எனவே, இந்த துறையில் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.