இன்னும் ஒரேநாள்… பரபரக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- களம் யாருக்கு சாதகம்?

தமிழ்நாடு அரசியல் களம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கிறது. வரும் 7ஆம் தேதி கடைசி நாள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் போலீசார், தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 122 புகார்கள் வந்துள்ளதாக தெரிகிறது.

தேர்தல் விதிமீறல்கள்

இதில் 115 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். தற்போது வரை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவ பிரசாந்த், அதிமுகவில்
ஓ.பன்னீர்செல்வம்
அணி சார்பில் செந்தில் முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல்

5 நாட்களில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிமுகவில்
எடப்பாடி பழனிசாமி
அணி சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இவர் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் நபருக்கு தங்கள் ஆதரவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

உச்ச நீதிமன்ற வழக்கு

ஆனால் இரட்டை இலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சின்னம் கேட்டு போனால் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருவரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்டி பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஏற்கனவே பொதுக்குழு தனக்கு சாதகமாக இருப்பதால் எடப்பாடி தரப்பு வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது.

பொதுக்குழு முடிவு

அவர்கள் தரப்பு வேட்பாளரான கே.எஸ்.தென்னரசு பெயரை மட்டும் போட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியது. இதற்கு ஆதரவா? இல்லையா? என நேற்று இரவு 7 மணிக்குள் பதில் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கடிதத்தை ஓபிஎஸ் தரப்பு நிராகரித்து விட்டது. தங்கள் தரப்பு வேட்பாளரின் பெயரே இல்லை.

டெல்லி செல்லும் அவைத்தலைவர்

இது ஒருதலைபட்சமான நடவடிக்கை என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இன்றைய தினம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் டெல்லி செல்கிறார் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளது. இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் எப்போது வேட்புமனு தாக்கல் செய்ய போகிறார்?

யாருக்கு சாதகம்?

இரட்டை இலை வசமாகி விடுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் பிரதான போட்டி என்பது திமுக கூட்டணி vs அதிமுக என்பது தான். அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டிக்கு தயாராகி விட்டார். அதிமுக தரப்பில் தான் யார் எதிர்க்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போதைய சூழலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தான் வெற்றி வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.