அங்காரா: துருக்கியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது, அம்மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் தொழில் நகரான காசியான்டேப் சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. பூகம்பத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலஅதிர்வும் ஏற்பட்டது. அதன் தாக்கம் அளவுகோலில் 6.7 ரிக்டராக பதிவாகியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தின் அதிர்வலைகள் லெபனான், சிரியா, ஜோர்டான், இராக் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
இந்த பூகம்பத்திற்கு துருக்கி – சிரியா இரு நாடுகளிலும் இதுவரை 1,500 பேர் வரை பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். பூகம்பத்திற்கு துருக்கியின் காசியான்டேப், சிரியாவின் அஃப்ரின் நகரமும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்த நிலையில், துருக்கியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் மீண்டும் புதிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இரு நாடுகளிலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 1939-ஆம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு பூகம்பம் இது என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.