நான் விவசாயி மகன்: தென்காசிக்கு புதிய திட்டங்களை வகுக்கும் மாவட்ட ஆட்சியர்!

தென்காசியில் புதிய மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்ற ரவிசந்திரன் தான் விவசாயி மகன் என்பதால் விவசாயம் சார்ந்த குறைகளை கனிவுடன் கேட்டு உடனடி தீர்வு காண்பேன் என தெரிவித்தார்

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிந்து 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் 5ஆவது மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் ரவிச்சந்திரன் கூறுகையில், தென்காசி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதாலும், தான் ஒரு விவசாயின் மகன் என்பதாலும் விவசாயிகளின் குறைகளை கனிவுடன் கேட்டு அது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறினார், அரசு சார்ந்த திட்டங்கள் உரிய நபர்களுக்கு வழங்குவதற்கு வழிவகை செய்யப்படும்,

மேலும் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளமாக குற்றாலம் அமைந்துள்ளதால் அதனை மேம்படுத்துவதற்கும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று சீசன் மாதங்கள் மட்டுமில்லாமல் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பணிகள் குற்றாலத்திற்கு வருகின்ற வகையில் வழிவகைகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் பொதுமக்கள் தங்கள் குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிப்பதற்காக தன்னுடைய அலுவலகம் திறந்தே இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் அவரை தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்க கோரிக்கைகள் வைத்தனர். “ஆகாஷ், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளில் திறம்பட செயல்பட்டதுடன், மாவட்டத்தின் முக்கிய நீர் நிலை ஆக்கிரமிப்புகளை பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் அகற்றி நடவடிக்கை எடுத்தார். மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தி பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தினார்.

தென்காசி மாவட்டத்தில் காலியாக இருந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை நேர்மையாக நடத்தி தேர்வின் மூலம் 53 கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் பயன்பெற முடியாமல் தவித்த அரசியல் கட்சியினர் ஆட்சியர் ஆகாஷ் குறித்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு தொழில் திறனாய்வு பிரிவு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.” என்று விவசாயிகள் தரப்பில் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.