துருக்கி-சிரியா எல்லையில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு சுமார் 17.9 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 6.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளில்ல் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் தூங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி – சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 521 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் 284 பேரும், சிரியாவில் 237 பேரும் என மொத்தம் 521 பேர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கவும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சற்று முன் கிடைத்த தகவலின்படி துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 912ஐ தாண்டியது. சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 467ஐ தாண்டியது. இதனால் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது.
இந்நிலையில் துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,300 ஆக உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.