மோடியின் 3 நாட்கள் பிளான்; அதிரும் கர்நாடகா… பாஜக போட்ட மெகா ஸ்கெட்ச்!

பிரதமர் மோடி பிப்ரவர் 6 முதல் 8ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். குறிப்பாக தும்கூரு ஹெலிகாப்டர் ஆலை திறப்பு விழா, தொழில் நகரத் திட்டம் மற்றும் தூய்மை குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல் – மே மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.

பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

இதற்கான வேலைகளை பாஜக தற்போதே தொடங்கிவிட்டது. தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சிக் கட்டிலில் இருப்பதால் அதை தக்க வைக்க வியூகம் வகுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக பிரதமர் மோடி பல்வேறு கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாகவே இன்றைய தினம் கர்நாடகா வருகிறார். இந்த பயணத்தால் பாஜகவினர் மிகுந்த உத்வேகம் பெற்று களப்பணியில் வேகம் காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் வியூகம்

கடந்த மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை மிகத் தீவிரமாக விமர்சனம் செய்து பாஜகவிற்கு வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெலகாவியில் உள்ள 18 தொகுதிகளில் 16ஐ கைப்பற்றுவதே இலக்கு என சூளுரைத்தார்.

தும்கூரு திட்டம்

அந்த வகையில் தும்கூரு மாவட்டத்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் பயணம் சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்கின்றனர். நடப்பாண்டில் இரண்டு முறை கர்நாடகாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த முறை கலபுர்கியில் மோடியின் பேச்சு பெரிதாக பேசப்பட்டது. குறிப்பாக பஞ்சாரா சமூகத்தினரை குறிவைத்து காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஹெலிகாப்டர் ஆலை

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் திட்டங்களில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தக் கூடியது ஹெலிகாப்டர் ஆலை. கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால இலக்கு

கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் முழுமையான பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பசுமை ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி அடுத்தகட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு இலகுரக, பல்நோக்கி ஒற்றை எஞ்சின் ஹெலிகாப்டர்கள் ஆகியவை தயாரிக்கப்படும். ஆண்டிற்கு 30 ஹெலிகாப்டர்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்து 60, 90 ஆக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.