வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்

டாக்கா,

வெளிநாடுகளில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. நடப்பு வருட தொடக்கத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில்களை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடந்து உள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் அடுத்தடுத்து 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் கோவில் சுவர்களில் எழுதப்பட்டன.

இந்த நிலையில், வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையன்று இந்த சம்பவம் நடந்து உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை காவல் ஆணையாளர் மஹ்பூபர் ரகுமான், போலீஸ் சூப்பிரெண்டு முகமது ஜகாங்கீர் உசைன் மற்றும் இந்து, புத்த, கிறிஸ்துவ ஒய்கியா பரிஷத் தாகுர்காவன் மாவட்ட பொது செயலாளர் பிரபீர் குமார் குப்தா ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள் கூறும்போது, தந்தலா யூனியன் பகுதியில் சிந்தூர்பிந்தி என்ற இடத்தில் இருந்த கோவிலில் 9 சாமி சிலைகளும், பாரியா யூனியனில் காலேஜ்பாரா பகுதியில் உள்ள கோவிலில் 4 சாமி சிலைகளும் மற்றும் சரோல் யூனியனில் ஷாபாஜ்பூர் நாத்பாரா பகுதியில் உள்ள 12 கோவில்களில் 14 சாமி சிலைகளும் சூறையாடப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்று கிழமை காலைக்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்க கூடும் என காவல் அதிகாரி கைருல் அனாம் கூறியுள்ளார். இருள் சூழ்ந்த நிலையை பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலைகளை சூறையாடி உள்ளனர். சாமி சிலைகளின் கைகள், கால்கள் மற்றும் தலைகள் உடைக்கப்பட்டு உள்ளன. சில சிலைகளை உடைத்து, குளத்தில் வீசி சென்றுள்ளனர் என சாமி பூஜை கொண்டாட்டங்களுக்கான அமைப்பின் பொது செயலாளர் வித்யாநாத் பர்மன் கூறியுள்ளார். முறையாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அரசு நிர்வாகத்திடம் கேட்டு கொண்டுள்ளார். சில சிலைகளை சாலையோரத்திலும் வீசி சென்றுள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்த தாக்குதல்களை நடத்திய மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.