சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் ஏ, பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பழனிசாமி நிறுத்தியுள்ள வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27-ம் தேதி நடக்க உள்ளது. அதிமுகவில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் தனித்தனியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், இருவருக்கும் ‘இரட்டை இலை’ சின்னம் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பழனிசாமி உச்சநீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற அறிவுறுத்தல்படி, கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு அறிவிக்கப்பட்டு, பழனிசாமி அறிவித்த கே.எஸ்.தென்னரசு பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த ஆவணங்களை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தமிழ்மகன் உசேன் நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும், பொது வேட்பாளரின் ஏ, பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை தமிழ்மகன் உசேனுக்கு வழங்க ஒப்புதல் அளித்தும் கடிதம் வழங்கி இருந்தனர். அவற்றையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவகுமாருக்கு தேர்தல்ஆணையம் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் பிப்.3-ம் தேதி வழங்கிய உத்தரவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டும், அதிமுகவின் அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளையும் மேற்கொள்ளும் அங்கீகரிக்கப்பட்ட நபராக தமிழ்மகன் உசேன் செயல்படுவார் என குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் இருந்து கடிதமும் பெறப்பட்டுள்ளதால், இந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதன் வேட்பாளருக்கு ஏ, பி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்கும் அதிகாரம் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பழனிசாமி நிறுத்தியுள்ள வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அவர் இன்று மனு தாக்கல் செய்கிறார்.