ஈரோடு மாவட்டத்தில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். மேலும் அக்காள்-தம்பி படுகாயமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் பிக்பாஸார் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் பிரேம்குமார் (32). இவர் ஈரோடு முத்துக்கவுண்டம்பாளையம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்த உறவினர்களை கோவைக்கு அழைத்து வருவதற்காக காரில் சென்றுள்ளார். அப்பொழுது கவுண்டம்பாளையம் ரிங் ரோடு வளைவில் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக திடீரென பின்னால் வந்த கார் பிரேம்குமார் காரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிரேம் குமார் மற்றும் மற்றொரு காரில் வந்த பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது அக்கா வளர்மதி ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்ததில் பிரேம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ராஜேந்திரன் மற்றும் வளர்மதி ஆகிய இரண்டு பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.