ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் அடுத்தஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத் சட்டப்பேரவையில் அம்மாநில நிதி அமைச்சர் ஹரீஷ்ராவ் ரூ.2,90,396 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அதில், ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம், இந்த ஆண்டு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 80 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஊதியத்திற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு, கடை நிலை ஊழியர்கள் முதல் கோட்டாட்சியர் பணி வரை தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே 95 சதவீதம் முன்னுரிமை போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் வரும் மார்ச் மாத இறுதிக்குள் அம்பேத்கரின் 125 அடி உயர சிலை அமைக்கும் பணி நிறைவடைய உள்ளது. இதற்காக தெலங்கானா அரசு ரூ. 147 கோடியை செலவிட்டுள்ளது.
7 லட்சம் சதுர அடியில் தெலங்கானா மாநில புதிய தலைமை செயலகம் ஹைதராபாத் தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.650 கோடி செலவில் கட்டப்பட்ட இக்கட்டிடத்தை வரும் 17-ம்தேதி முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைக்க உள்ளார். ஏழைகளுக்கான 2 படுக்கை அறை வீட்டிற்காக ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது உட்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.