சமீபத்தில் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு (AI) Open AI என்ற நிறுவனம் வடிவமைத்து அதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்திருந்தது. பயனர்கள் கேட்கின்ற அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளிப்பது, அலுவலகத்துக்கு விடுப்பு கடிதம் எழுதுவது தொடங்கி படத்துக்குத் திரைக்கதை எழுதுவது வரை நமக்குத் தேவையான அனைத்தையுமே செய்யக்கூடியதாக இருந்தது ChatGPT. இதனால் பலரும் இவை கூகுள் சர்ச் சேவைக்கு போட்டியாக அமையும் என்று தெரிவித்து வந்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் பெருமளவில் Open AI நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது இந்த ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’ என்ற செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை (AI) அறிமுகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ChatGPT செய்யும் அனைத்தையும் செய்யுமாம் Bard. முதலில் சோதனை அடிப்படையில் சில பயனாளர்களுக்கு மட்டுமே இதனை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அதைத் தொடர்ந்து விரைவில் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1/ In 2021, we shared next-gen language + conversation capabilities powered by our Language Model for Dialogue Applications (LaMDA). Coming soon: Bard, a new experimental conversational #GoogleAI service powered by LaMDA. https://t.co/cYo6iYdmQ1
— Sundar Pichai (@sundarpichai) February 6, 2023
இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள பதிவில், “2021-ல், உரையாடல் பயன்பாடுகளுக்கான எங்கள் Language Model for Dialogue Applications (LaMDA) தொழில்நுட்பத்தின் அடுத்தத் தலைமுறைக்கான உரையாடல் திறன்களை அறிமுகப்படுத்தினோம். தற்போது LaMDA மூலம் இயக்கப்படும் ‘Bard’ என்ற Google AI-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம்” என அறிவித்துள்ளார்.