Lok Sabha News: நாடாளுமன்றத்தில் ஒன்றரை மணி நேரம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அதானி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும், அவரை (அதானி) பிரதமர் பாதுகாக்கிறார் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (Joint Parliamentary Committee) அமைக்க வேண்டும் என்று ராஜ்யசபா முதல் லோக்சபா வரை காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறது.
மோடி ஆட்சியில் மாயஜாலம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அதானி குழுமம் தொடர்பான விவகாரத்தை மேற்கோள் காட்டி, 2014ல் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, எட்டு ஆண்டுகளில் தொழிலதிபர் கவுதம் அதானி உலகின் இரண்டாவது பணக்காரர் ஆனார். “இப்படி ஒரு மாயஜாலம்” மோடி ஆட்சியில் அரங்கேற்றி உள்ளது என மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி பேசியதில் உண்மையில்லை
கௌதம் அதானி தொடர்பாக பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி பல கேள்விகளை கேட்டிருந்தார். அதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி இன்று தனது உரையின் போது பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் அவ்வாறு செய்யவில்லை. அதானி குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. இதையடுத்து, பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். மக்களவையில் பிரதமர் மோடி கூறியதில் உண்மையில்லை என்றும், தொழிலதிபர் கௌதம் அதானியை அவர் பாதுகாப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அதானியை பாதுகாக்கும் பிரதமர்
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் பேச்சில் எந்த உண்மையும் இல்லை. அதானி நண்பராக இல்லாவிட்டால் விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருப்பார். ஷெல் கம்பெனிகள் மற்றும் பினாமி சொத்துக்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம். இது இந்தியாவின் உள்கட்டமைப்பு தொடர்பானது. இது ஒரு பெரிய மோசடி. பிரதமர் இதுபற்றி எதுவும் பேசவில்லை. கௌதம் அதானி, தனது நண்பர் இல்லையென்றால் விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் கூறியிருப்பார். கௌதம் அதானியை பிரதமர் தான் பாதுகாக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. எனக்கு புரிகிறது இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பிரதமரின் பேச்சில் எனக்கு திருப்தி இல்லை என ராகுல் காந்தி கூறினார்.
அதானி.. அதானி.. முழக்கம்
அதேநேநேரத்தில் பிரதமர் உரையை முடிக்கும் போதும் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதானி.. அதானி.. என்று முழக்கமிட்டனர். பிரதமர் தனது உரையில் ஒரு இடத்தில் கூட அதானி குறித்த குற்றாசாட்டுக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வலிமை பெற்றுள்ளது
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆக்ரோஷமான முழக்கங்களுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசினார். அப்பொழுது, “கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகளில் நிலையற்ற தன்மையால் பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலிலும் இந்தியா 5-வது பொருளாதாரமாக உருவெடுத்திருக்கிறது. இதனால் நாட்டு மக்களுக்கு பெருமிதம் இருக்காதா? இந்த சாதனை யாருக்கேனும் வேதனையை தந்திருக்குமானால், அவர்கள் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்தியா வலிமை பெற்றுள்ளது. அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. அதன் மீதான நம்பகத்தன்மை மேம்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை, நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் பார்க்கிறது எனப் பேசினார்.