*கூட்டம் ஒத்தி வைப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில், துறை அதிகாரிகள் பங்கேற்காததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். எனவே, கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தையே பிரதானமாக நம்பியிருக்கிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டு தீர்வு காண்பதற்கு வசதியாக, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தலைமையிலும் மற்றும் தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டம் உதவி கலெக்டர் தலைமையிலும் மாதந்ேதாறும் நடத்தப்படுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி, திருவண்ணாமலை பிடிஓ அலுவலக கூட்ட அரங்கத்தில் திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ மந்தாகினி தலைமையில் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
அதில், உதவி வேளாண் இயக்குநர் அன்பழகன், பிடிஓக்கள் பரமேஸ்வரன், மரியதேவானந் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர். ஆனால், ஆர்டிஓ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கூட்டத்துக்கு வரவில்லை.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக வெளியில் சென்றிருப்பதால் ஆர்டிஓ பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தங்களுடைய குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டிய 14 துறைகளின் அதிகாரிகள் கூட்டத்துக்கு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி, வெளி நடப்பு செய்தனர். மேலும், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து, வேளாண்துறை அதிகாரிகள் சமரசப்படுத்தினர். கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, வேறொரு தேதியில் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.