ஈரோட்டில் எடப்பாடி நடத்தும் ஆலோசனை: தனியார் விடுதியில் மாஜிக்கள் ஆஜர்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். இரு தரப்பும் களமிறங்கினால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கிடையே
எடப்பாடி பழனிசாமி
தாக்கல் செய்த இடையீட்டு மனு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற நகர்வுகள் மூலமாக தற்போது எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரை வாபஸ் பெற்று இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று வேட்புமனுக்கான பரிசீலனை நடைபெற்றது. காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு இன்று முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு கூடி வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ராமலிங்கம், செல்லூர் ராஜு, வேலுமணி, உதயகுமார், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், வேட்பாளர் தென்னரசு, மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜா, விடியல் சேகர் மற்றும் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரத்துக்கு வந்தால் எப்படி எதிர்கொள்வது, திமுக – காங்கிரஸ் கூட்டணி தீவிரமாக களமாடி வரும் நிலையில் அதை எப்படி களத்தில் முறியடிப்பது, வாக்காளர்களை சிறப்பாக கவனிப்பது எப்படி என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.