
குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை உள்ளிட்ட பொருள்களுக்கு தடைவிதித்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
தடை உத்தரவுக்கு எதிராக புகையிலை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் தடையை ரத்து செய்தது.
உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அறிவிப்பாணையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களால் ஏற்படும் ஆபத்தை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்றும், அதனால் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
newstm.in