குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், குட்கா, புகையிலை பொருட்களுக்கான தடையை ரத்து செய்து உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசின் குட்கா புகையிலை தடை சட்டத்திற்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் கடந்த வாரம் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், புதிய தடைச் சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, குட்கா தடையை உறுதி செய்ய சட்டம் அல்லது விதிகளில் திருத்தம் செய்யலாமா? அல்லது புதிய சட்டத்தை ஏற்றுவதா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசனை செய்தது.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து உச்சநீதிமன்ற சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் தமிழக அரசு முடிவு செய்து இருந்தது.
இந்நிலையில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.