ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கிய அ.ம.மு.க-வுக்கு, தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்காததால், தேர்தலிலிருந்து விலகுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன், யாருக்காவது ஆதரவு அளிப்பாரா என பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில், `அ.ம.மு.க-வின் ஆதரவு யாருக்கும் கிடையாது’ என டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்கு எந்தவித தடையும் இல்லை. அப்போது குக்கர் சின்னம் எங்களுக்கு வழங்கப்படுவதில் எந்த தடையும் இல்லை. இது தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெளிவாக இருக்கிறது. நாங்கள் 2019-லும் சரி, 2021-லும் சரி தனியாகத்தான் போட்டியிட்டோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் என்றுமே இருந்தது கிடையாது.
ஒரே கட்சியில் இணைகிறோம் என்று நான் சொல்லவில்லை, எல்லோரும் ஓர் அணியில், கூட்டணியில் சேர வேண்டும் என்றுதான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். தி.மு.க என்கிற தீயசக்தியை வீழ்த்த வேண்டுமென்றால், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் என்று நம்புகிறவர்கள் எல்லோரும் ஓர் அணியில் திரண்டு தி.மு.க-வை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கின்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

ஓ.பி.எஸ் அ.தி.மு.க, நாங்கள் அ.ம.மு.க. நாங்கள் எல்லாம் ஓரணியில், ஒரு கூட்டணியில் போகவேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு, அவருடைய நிலைப்பாடு. இரட்டை இலையைக் கொடுத்துவிட்டதால் அவர்கள் ஜெயித்துவிடப் போகிறார்களா என்ன… நீதிமன்றமே இரட்டை இலைச் சின்னத்தை பழனிசாமி கம்பெனிக்கு கொடுத்திருந்தாலும், இந்த இரட்டை இலைக்கான சக்தி இனிமே இருக்காது. நாங்கள் பெரிய கட்சியும் கிடையாது.
தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்று நாங்கள் அங்கு போட்டியிடத் தயாரானோம். நாங்கள் நல்ல வாக்கு சதவிகிதத்தை பெறுவோம் என்கிற நம்பிக்கையில்தான் அங்கு இறங்கினோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு சின்னம் கொடுக்க மறுத்ததால் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.

நாங்கள் தி.மு.க கூட்டணியை ஆதரிக்க முடியாது. தீயசக்தியையும் ஆதரிக்க மாட்டோம், துரோக சக்தியையும் ஆதரிக்க மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதுதான் எங்களின் நிலைப்பாடு. யாருக்கும் ஆதரவு இல்லை. தேர்தல் ஆணையம் எங்களுக்குச் சின்னம் கொடுத்திருந்தால், நாங்கள் நின்றிருப்போம். இதில் எந்த அரசியலும் கிடையாது. என்னிடம் யாரும் இதைப்பற்றி பேசவில்லை” என்று கூறினார்.