பெரு நாட்டில் பரவிய பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் 600 கடற்சிங்கங்கள் உயிரிழந்து உள்ளன.
பெரு நாட்டில் சமீப வாரங்களாக எச் 5 என் 1 வகை பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பாதுகாக்கப்பட்ட 8 கடலோர பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் உயிரிழந்த பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இது தவிர, பாதுகாக்கப்பட்ட 7 கடல்வாழ் பகுதிகளில் இருந்து 585 கடற்சிங்கங்கள் உயிரிழந்து உள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது.
இதனை செர்னான்ப் என்ற இயற்கை பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்து உள்ளது. இவற்றில் பெலிகான்கள், கடல் பறவைகள் மற்றும் பென்குவின்கள் உள்ளிட்ட பறவைகளும் உயிரிழந்து உள்ளன. இது பற்றி ஆய்வக பரிசோதனை நடத்தியதில் கடற்சிங்கங்களில் எச் 5 என் 1 வகை பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் உயிர்சூழல் பாதுகாப்பு ஒழுங்கு விதிமுறைகளை அறிவித்து உள்ளனர். கடற்கரையில் உள்ள கடற்சிங்கங்கள் மற்றும் கடல் பறவைகளுடன் செல்ல பிராணிகளை தொடர்பு கொள்ள விட வேண்டாம் என பொது மக்களுக்கு பெரு நாட்டின் தேசிய வன மற்றும் வனவாழ் சேவை அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
சீன உளவு பலூன்; வெளிவரும் மர்மங்கள்… தேடிக் கண்டுபிடித்த அமெரிக்கா!
2021 ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் பல்வேறு பரவல்கள் அறியப்பட்டன. பண்ணை பறவைகளிலும், பாலூட்டிகளிலும் பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளன. இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளிலும் இந்த வைரசின் பாதிப்பு பாலூட்டிகளிடையே பரவியிருப்பது கடந்த காலங்களில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.