அதானி – ஹிண்டன்பர்க் விவகாரத்தில் மோடி பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கடந்த 3 நாள்களாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நேற்றுகூட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “முன்பு அதானியின் விமானத்தில் பிரதமர் மோடி பறந்தார். தற்போது மோடியின் விமானத்தில் அதானி பறக்கிறார்” என்று நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார். மக்களவையில் இன்று மாலை குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது உரையாற்றிய மோடி, “மக்களவையில் நேற்று சிலரின் கருத்துகளுக்குப் பிறகு, ஒட்டுமொத்த சூழலும், அவர்களின் ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர். குடியரசுத் தலைவர் உரை நடந்துகொண்டிருந்தபோது, சிலர் அதைத் தவிர்த்தனர்.
இரண்டு, மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலையற்றத்தன்மை இருந்தது. ஆனால் இன்று எங்களிடம் நிலையான, தீர்க்கமான அரசாங்கம் இருக்கிறது. இந்தியா தற்போது உற்பத்தி மையமாக வளர்ந்துவருகிறது. உலகமே, இந்தியாவின் வளர்ச்சியில் அதன் செழிப்பைக் காண்கிறது. ஆனால், சிலர் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. நாட்டில் அனைத்துத் துறைகளிலும் நம்பிக்கை இருக்கிறது. சிலர் மட்டும் விரக்தியில் மூழ்கியிருக்கின்றனர்.

2004 முதல் 2014 வரை ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றுவதே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் டிரேட்மார்க். 2004 முதல் 2014 வரையிலான காலகட்டம் ஊழல்கள், வன்முறைகளின் தசாப்தம். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைதான் என்னுடைய பாதுகாப்புக் கவசம். உங்களின் குற்றச்சாட்டுகளால் அதை உடைக்க முடியாது. மோடி மீதான நம்பிக்கை தலைப்புச் செய்திகளால் வரவில்லை. ஊடகங்களின் முன்னணி முகங்களின் மூலம் வரவில்லை.
என்னுடைய வாழ்வை நாட்டு மக்களுக்காக, நாட்டின் எதிர்காலத்துக்காக அர்ப்பணித்திருக்கிறேன். நெருக்கடியான நேரத்தில் மோடி உதவ வந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். அப்படியிருக்க உங்களின் குற்றச்சாட்டுகளை மக்கள் எப்படி ஏற்பார்கள். 2014-க்கு முந்தைய தசாப்தம் இழக்கப்பட்ட தசாப்தம் என்று அறியப்படும். அதேசமயம் 2030-களின் தசாப்தம் இந்தியாவின் தசாப்தம் என்பதை நாம் மறுக்க முடியாது.

ஆணவத்தில் குடித்துவிட்டு தனக்கு மட்டுமே அறிவிருக்கிறது என்று நினைப்பவர்கள், மோடி மீது பொய்யான, முட்டாள்தனமான சேற்றைப் பூசி, மோடியைத் தவறாகப் பயன்படுத்தினால்தான் வழி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளை எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கட்டாய விமர்சனம் செய்து வீணடித்தன” என்று கூறினார்.