
கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி கடந்த சில வருடங்களாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு ஜெர்மனியிலும், பின்னர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் உம்மன் சாண்டிக்கு தொடர் சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் மறுப்பதாக புகார் எழுந்தது. அவரது மனைவி, மூத்த மகள், இளைய மகன் ஆகியோர் மறுப்பதாகவும், எனவே சிகிச்சைக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, உம்மன் சாண்டியின் தம்பி அலெக்ஸ், முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அதை உம்மன் சாண்டியும், அவரது மகன் சாண்டி உம்மனும் மறுத்தனர். தனக்கு குடும்பத்தினர் சிகிச்சை அளிக்க மறுப்பதாக கூறும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று உம்மன் சாண்டி ஃபேஸ்புக் லைவ்வில் தெரிவித்தார்.
இதற்கிடையே உம்மன் சாண்டியை சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவரது குடும்பத்தினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் நேற்று இரவு திடீரென உம்மன் சாண்டி திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.